தனியார் பால் நிறுவனங்கள் தயாரிக்கும் பாலில் கெமிக்கல் கலக்கப்படவில்லை என நிரூபித்துவிட்டால் தற்கொலை செய்து கொள்கிறேன் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
தனியார் நிறுவனங்கள் தயாரித்து விற்பனை செய்யும் பால் பாக்கெட்டுகளில் ரசாயனம் கலந்திருப்பதாகவும், அதனால்தான் குழந்தைகளுக்கு கூட புற்றுநோய் வருகிறது என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சமீபத்தில் கூறிய செய்தி அனைவரையும் அதிர்ச்சியடை வைத்தது.
திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி “ஆவின் பால் மட்டுமே உடல்நலத்திற்கு சிறந்தது. அந்த பால் தாய்ப்பாலுக்கு நிகரானது. மற்ற தனியார் நிறுவன பால் அனைத்தும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் தன்மையுடையது. அந்த பால் கெடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, தனியார் நிறுவனங்கள் அதில் ரசாயனத்தை கலக்கின்றன. அதனால் புற்றுநோய் ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு கூட புற்றுநோய் வருவதற்கு தனியார் நிறுவன பாலே காரணம்” என அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியது. அவர் கூறுவதில் உண்மையில்லை என தனியார் பால் நிறுவனங்கள் மறுப்பு தெரிவித்தன.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் “ பிரிட்ஜில் இருந்து பாலை எடுத்து வெளியே வைத்தால் அடுத்த 5 மணி நேரத்தில் பால் கெட்டுப்போக வேண்டும். அவ்வாறு கெடவில்லை எனில் அது ரசாயனம் கலந்த பால்தான்” என தெரிவித்தார். மேலும், பாலில் ரசாயணம் கலக்கும் நிறுவனங்கள் விரைவில் களையெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் மீண்டும் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் “ தனியார் பால் நிறுவனங்கள் தயாரிக்கும் பாலில் 100 சதவீதம் வேதிப்பொருள் கலக்கப்படுகிறது. இது மாநில அரசின் பரிசோதனைக்கூடத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த பாலை மத்திய அரசின் கீழ் செயல்படும் பரிசோதனைக்கூடத்திற்கும் அனுப்பியுள்ளோம். அதன் சோதனை முடிவுகள் கிடைத்த பின்னர், சம்பந்தப்பட்ட தனியார் பால் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
தனியார் நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் பாலில் ரசாயணத்தை கலக்கவில்லை என நிரூபித்தால் நான் என் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிடுகிறேன். ஏன், தற்கொலையே செய்து கொள்கிறேன்” என அவர் ஆவேசமாக கூறினார்.