சென்னை தாம்பரத்திலிருந்து அந்தமான் நோக்கி சென்ற, இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமானத்தில் பயணித்தவர் நலமுடன் திரும்பி வர பிரார்த்தனை செய்வதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை, கடந்த 22ஆம் தேதி காலை,விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32 விமானம், தாம்பரம் விமானப்படை விமானதளத்தில் இருந்து அந்தமான புறப்பட்ட போது நடுவானில் காணாமல் போனது. இந்த விமானத்தில் 29 பேர் கொண்ட குழு விமானத்தில் பயணித்துள்ளனர். தற்போது இந்த விமானத்தை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இதுபற்றி தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“சென்னையில் இருந்து அந்தமானுக்கு 29 பேருடன் சென்ற ராணுவ விமானம் நேற்று தீடீரென மாயமானது. இந்த விமானம் கடலில் விழுந்து மூழ்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
கடந்த ஆண்டும் இதேபோன்ற ஒரு விபத்து ஜூன் மாதம் 8ஆம் தேதி டோர்னியர் ரக விமானம் பயிற்சிக்காக புதுச்சேரி வரை சென்று விட்டு, சென்னை திரும்பும் போது மாயமானது. இதில் 3 பேர் பயணித்த விமானியும், துணை விமானியும் இறந்துள்ளனர். எனவே, மீண்டும் அதேபோல் ஒரு செய்தி வந்து இருப்பது அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.
தொடர்ந்து இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும். மாயமான 29பேர் குடும்பங்களுக்கு தனது ஆறுதல்களை தெரிவித்ததுடன், விரைவில் அவர்கள் நலமுடன் திரும்பி வர பிரார்த்தித்துக் கொள்கிறேன்'' என்று அவர் கூறியுள்ளார்.