நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தேமுதிக படுதோல்வியடைந்ததை அடுத்து வருகிற உள்ளாட்சி தேர்தலில் தங்கள் பலத்தை நிரூபிக்க தேமுதிக தலைவர் விஜயகாந்த் தீவிர முயற்சி எடுத்து வருகிறார்.
இந்நிலையில் தேர்தல் தோல்வி குறித்து விஜயகாந்த் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். கட்சியின் அனைத்து பிரிவு நிர்வாகிகளையும் சந்தித்து அடுத்தக்கட்ட செயல்பாடு குறித்தும் தொடர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தலா ரூ.10 லட்சம் தருவதாக விஜயகாந்த் கூறியதை வலியுறுத்தி பணம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து பணம் தருவதாக கூறிய விஜயகாந்த் இன்னமும் பணத்தை கொடுக்காததால் நிர்வாகிகளும் திரும்ப திரும்ப கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் சிலர் தாங்கள் தேர்தலில் நின்று எல்லாவற்றையும் இழந்துவிட்டோம் எனவே நீங்கள் கொடுத்த வாக்குறுதியின் படி ரூ.10 லட்சத்தை கொடுங்கள் என வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்து டென்சன் ஆன விஜயகாந்த், என்னை மிரட்டுகிறீர்களா? நான் இதற்கெல்லாம் பயப்பட மாட்டேன். மேலும் கட்சியை கலைக்கவும் தயங்க மாட்டேன். இந்த பூச்சாண்டிக்கெல்லாம் அஞ்ச மாட்டேன் என்று ஆவேசமாக பேசியுள்ளதாக தகவல்கள் வருகின்றன.