அதிமுக, திமுக, மக்கள் நலக் கூட்டணி ஆகியவற்றிற்கு எத்தனை இடங்கள் என புதிய தலைமுறை தொலைக்காட்சி கருத்துக்கணிப்புகள் முடிவுகளை வெளியிட்டுள்ளன.
தேர்தலுக்கு 6 நாட்களே உள்ள நிலையில் புதிய தலைமுறை மற்றும் ஏபிடி நிறுவனம் சேர்ந்து தேர்தல் முடிவுக்கு முன் உதாரணமாக கருதப்படும் தேர்தல் கருத்துக் கணிப்பை நடத்தி முடிவை வெளியிட்டுள்ளது.
அந்த தொலைக்காட்சி மக்கள் விரும்பும் முதல் வேட்பாளர் யார்? என்ற கருத்துக் கணிப்பில், அதிமுக பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவிற்கு 39.66% பேரும், திமுக தலைவர் கருணாநிதிக்கு 31.89% பேரும், தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு 8.59% பேரும், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் 5.03% பேரும், சீமானுக்கு 2.40% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளதாக வெளியிட்டுள்ளது.
மேலும் மக்கள் நலக் கூட்டணி, விஜயகாந்துக்கு சாதகமானதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ஆம் என்று 26.76 % பேரும், இல்லை என்று 58.05 % பதில்கள் கிடைத்துள்ளது.
இந்நிலையில் புதிய தலைமுறை, ஏ.பி.டி. நிறுவனம் இணைந்து நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் முடிவுகளில், அதிமுக 164 இடங்களில் வெற்றி பெறும் என்றும், திமுக 66 இடங்களைப் பிடிக்கும் என்றும் தெரிய வந்துள்ளது.
மற்ற கட்சிகளுக்கு 4 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் கருத்துக் கணிப்பு முடிவு தெரிவிக்கிறது. எந்தக் கட்சிக்கு வாக்களிக்கப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு அதிமுகவுக்கு 38 புள்ளி 58 சதவிகிதம் பேரும், திமுகவுக்கு 32 புள்ளி 11 சதவிகிதம் பேரும் ஆதரவு தெரிவித்தனர்.
தேமுதிக கூட்டணிக்கு 8 புள்ளி 55 சதவிகிதமும், பாமகவுக்கு 4.47 சதவீதமும், நாம் தமிழர் கட்சிக்கு 2 புள்ளி 12 சதவீதமும் ஆதரவு தெரிவிக்கப்பட்டது.
பாரதிய ஜனதா 1 புள்ளி 96 சதவீதமும், தெரியாது என்று 8 புள்ளி 45 சதவீதமும் பதிலாகக் கிடைத்தன. எந்தக் கட்சி நிலையான ஆட்சியைத் தரும் என்ற கேள்விக்கு, ஆய்வில் பங்கேற்றவர்களில் 37 புள்ளி 96 சதவீதத்தினர் அதிமுகவை தேர்வு செய்தனர்.
31 புள்ளி 33 சதவீதம் பேர் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தனர். 7 புள்ளி 67 சதவீதம் பேர் தேமுதிக கூட்டணிக்கும், பாமகவுக்கு 4 புள்ளி 27 சதவீதமும் ஆதரவு கிடைத்தது.
எனினும், மீண்டும் ஆட்சி அமைக்க அதிமுகவுக்கு வாய்ப்பளிப்பீர்களா என்ற கேள்விக்கு 51 புள்ளி 68 சதவிகிதம் பேர் இல்லை என்றும், 42 புள்ளி 69 சதவிகிதத்தினர் ஆம் என்றும் பதிலளித்ததாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.