Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்னும் எத்தனை பேரின் தற்கொலைகளை அரசு வேடிக்கைப் பார்க்கப் போகிறது?- அன்புமணி

Anbumani

Sinoj

, திங்கள், 11 மார்ச் 2024 (17:14 IST)
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த காவலர் நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்னும் எத்தனை பேரின் தற்கொலைகளை அரசு வேடிக்கைப் பார்க்கப் போகிறது? என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

''சென்னை ஆவடியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற காவலர் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.30,000 பணத்தை இழந்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். காவலர் விக்னேஷ் விருதுநகரைச் சேர்ந்தவர். மணலியில் உள்ள காவல்துறை உதவி ஆணையாளர் அலுவலகத்தில் கணினி இயக்குபவராக பணியாற்றி வந்தார். அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு, அடுத்த சில வாரங்களில் நடைபெறவிருந்தது. இத்தகைய சூழலில் தான் அவர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆன்லைன் சூதாட்டம் ஒரு மனிதனின் வாழ்க்கையை எவ்வாறெல்லாம் சிதைக்கும் என்பதற்கு இது தான் கொடிய எடுத்துக்காட்டு ஆகும்.

தமிழ்நாட்டில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்தில் ஆன்லைன் ரம்மி சேர்க்கப்பட்டது செல்லாது என்று கடந்த ஆண்டு நவம்பர் 10-ஆம் நாள் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தப் பிறகு நிகழ்ந்த நான்காவது தற்கொலை இதுவாகும். கடந்த ஜனவரி 4-ஆம் நாள் மதுரையை அடுத்த திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த ஆசிரியர் சரவணன், ஜனவரி 7-ஆம் நாள் சென்னை மாடம்பாக்கத்தைச் சேர்ந்த விமானப்படை வீரர் சைதன்யாவின் குழந்தை, ஜனவரி 31-ஆம் நாள் நாமக்கல் மாவட்டம் மாம்பட்டி கண்ணன் என மூவர் ஏற்கனவே ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆன்லைன் சூதாட்டங்களில் இருந்து இளைஞர்களை காப்பாற்ற வேண்டுமானால் உச்சநீதிமன்றத்தில் தடை பெறுவது தான் ஒரே தீர்வு ஆகும். ஆன்லைன் ரம்மிக்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த நவம்பர் 10-ஆம் நாள் நீக்கிய நிலையில், அதன் பின் 88 நாட்கள் கழித்து தான் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டது.

அதே நேரத்தில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை எப்போது நடைபெறும் என்பதை உச்சநீதிமன்றம் அறிவிக்கவில்லை. மேல்முறையீட்டின் அடிப்படையில் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு அறிவிக்கை அனுப்பவும் நீதிபதிகள் முன்வரவில்லை. அதன்பின் 65 நாட்களாகி விட்ட நிலையில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான வழக்கின் விசாரணையை விரைவுபடுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் தமிழக அரசு அதன் அலட்சியத்தைக் கைவிட்டு, உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணையை விரைவுபடுத்தவும், சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை பெறவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.''என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷுக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கண்டனம்!