கும்மிடிப்பூண்டி அருகே சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் கனரக வாகனம் ஒன்று பழுதடைந்ததையடுத்து சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் ஊர்ந்து சென்றதால் பொதுமக்களும் மாணவர்களும் பாதிக்கப்பட்டனர்
சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து ஆந்திரா வழியே வடமாநிலங்களுக்கும், வடமாநிலங்களில் இருந்து ஆந்திரா வழியே சென்னைக்கும் நாள் ஒன்றுக்கு சுமார் 10,000 மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்வது வழக்கம். இதில் அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்களும் உள்ளடங்கும்.
கடந்த மாதம் பெய்த கன மழை காரணமாக ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையும் தமிழகத்தில் இருந்து ஆந்திர மாநிலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையும் முற்றிலுமாக சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் சாலையில் ஏற்பட்டுள்ள ராட்சத பள்ளம் காரணமாக சில சமயம் ஆங்காங்கே வாகனங்கள் பழுதடைந்து சாலை நடுவே நின்று விடுகிறது.
பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களும், பணி நிமித்தமாக செல்லக்கூடிய தொழிலாளர்களும் அரசு ஊழியர்களும் சரியான நேரத்திற்கு செல்ல முடியாத நிலை நீடித்து வருகிறது. அதேபோல் விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் சேதங்களும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் கும்மிடிப்பூண்டி அருகே கவரைப்பேட்டையில் வடமாநிலத்தில் இருந்து தமிழ்நாடு அதாவது சென்னை செல்லும் மார்க்கமாக ராட்சத பள்ளத்தில் சிக்கி வாகனம் ஒன்று பழுதடைந்ததை அடுத்து சுமார் 2 மணி நேரமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் பள்ளி கல்லூரி மாணவர்களும், வேலைக்கு செல்பவர்களும், வாகன ஓட்டிகளும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர். சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் நிலைமையை சமாளிக்க கவரப்பேட்டை போலீசார் போக்குவரத்து நெரிசலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் கனமழை பெய்து ஒரு மாதங்கள் கடந்தும் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சாலையை சீரமைக்காததே இந்த தொடர் போக்குவரத்துக்கும் விபத்துகளுக்கும் காரணம் என கூறும் அப்பகுதி மக்களும் வாகன ஓட்டிகளும், சுங்க வசூலில் ஆர்வம் காட்டும் அதிகாரிகள் சாலையை சீரமைப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை என கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். எதிர்வரும் காலங்களிலாவது இது போன்ற அவல நிலையை சமாளிக்க சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கையும் வைத்துள்ளனர்.