தமிழகத்தில் அடுத்த 15 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் தற்போது தென் மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. ஏற்கனவே கேரளா மற்றும் கர்நாடகாவில் பெய்த மழையின் காரணமாக தமிழகத்தில் உள்ள மேட்டூர் அணை நிரம்பியது. காவிரி ஆற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. சென்னையில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் வலுப்பெற்று வந்த தென் மேற்கு பருவமழை, வட மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்துள்ள நிலையில், வடமேற்ற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நீடித்து வருகிறது. மேலும், வழிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 15 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், தற்போது மழை பெய்து வருவது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.