சென்னையில் இன்று பிற்பகல் மழை தொடங்கும் என்றும் இன்றும் நாளையும் நல்ல மழை பெய்யும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்து தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார்.
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நேற்று வலுப்பெற்ற நிலையில், இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 14ஆம் தேதி வரை கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் இன்று நல்ல மழை பெய்யும் என்று காலை 10 மணி வரை 10 மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தனது சமூக வலைத்தளத்தில், சென்னையில் இன்று பிற்பகல் முதல் மழை தொடங்கும் என்றும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் டெல்டா மாவட்டங்களில் மட்டும் இன்றி, சென்னையிலும் விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் கனமழையை எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், குன்னூர் மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் கனமழை பெய்யும் என்பதால் சுற்றுலா செய்பவர்கள் தங்கள் திட்டத்தை ஒத்தி வைக்கவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களிலும் அடுத்த மூன்று நாட்களில் கனமழை பெய்யும் என்றும்,
தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.