கோவை உள்பட 13 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கக்கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக நாளை, அதாவது டிசம்பர் 13ஆம் தேதி, கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
மேலும், டிசம்பர் 14 மற்றும் 15ஆம் தேதிகளில் தமிழகத்தின் பல இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யும் என்றும், டிசம்பர் 16, 17 தேதிகளிலும் மழை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றும் நாளையும் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் வாய்ப்பு இருப்பதால், மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.