தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் இன்று இரவு கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கேரளாவில் அடுத்த சில தினங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக சென்னையை உட்பட சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது என்பதை நாமும் காண்கிறோம்.
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய ஏழு மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாளை முதல், அதாவது மே 22 முதல் 27ஆம் தேதி வரை தமிழகத்தின் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்க சுழற்சி காரணமாக இந்த மழை ஏற்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகரத்தை பொருத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.