வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் நேற்று விடிய விடிய மழை பெய்ததால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை பல்வேறு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தாலும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், சென்னையில் அதிக அளவில் மழை நீர் தேங்கும் இடங்களில் ராட்சதப் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், இன்று காலை செங்கல்பட்டு, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, தஞ்சாவூர் மற்றும் விழுப்புரம் ஆகிய பகுதிகளிலும், புதுச்சேரி, காரைக்கால் ஆக்கிய பகுதிகளிலும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.