தமிழகத்தில் உள்ள 16 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் தோன்றியுள்ள புயல் சின்னம் காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் இன்று பிற்பகல் 1 மணி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 16 மாவட்டங்களில் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
ஏற்கனவே பெய்த கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் உள்பட நீர்நிலைகள் நிரம்பியுள்ள நிலையில் மேலும் மழை பெய்து கொண்டிருப்பதால் உபரி நீர் திறக்கப்படுகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு மாறி கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.