காலத்தின் கண்ணாடியென்று கவிஞர்களைக் குறிப்பிடுவார்கள்…அந்தவகையில் தமிழுக்குச் செழுமை சேர்த்தவர் கவிஞர் கண்ணதாசன்.
மெத்தப்படித்தவர்கள் என்று மட்டுமில்லாது பள்ளிவாசலையே மிதிக்காதவர்களின் காதுகளில் நுழைந்து மனதிலும் தன் தமிழையும் தத்துவத்தையும் பதிக்கச் செய்து, தானும் காலம் கடந்து வாழ்ந்து வருபவர் கண்ணதாசன்.
கடந்த 1927 -ல் பிறந்து, 1981 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி தீவிரச் சிகிச்சைப் பிரிவில் இருந்த கண்ணதாசன் சிகிச்சைப் பலனளிக்காமல் அமரரானார்.
அவர் 54 ஆண்டுகளே வாழ்ந்திருந்தாலும் அவரது சாதனைகளும் தமிழெழுத்துலகில் அவர் விட்டுச் சென்ற புத்தகங்கள் மற்றும் காவியங்கள், சினிமாப்பாடல்கள் அனைத்தும் காலத்தின் பொக்கிஷம். இக்கால இளைய கவிகளும், பாடலாசிரியர்களும், அரசியல்வாதிகளும், இலக்கியவாதிகளும் இதில் கற்க எத்தனையோ விஷயங்கள் உள்ளது.
காலத்தை உழுதிட்ட கவியரசருக்கு அவரது பாடலைக் கேட்கின்ற, அவரது அர்த்தம் பொதித்த தத்துவங்களைப் படிக்கின்ற அனைவருமே ரசிகர்களாக மாறிப்போவது என்பது இயல்பான ஒன்று. தமிழ்ம்மொழியில் பல்கலைக்கழகம் அவர்; எட்டாவது படித்துவிட்டு பல முனைவர்களுக்கும் கருப்பொருள் கொடுத்து ஆராய்ச்சிப் பட்டம் பெறவைக்கின்ற எழுத்துமேதை அவர். அவரிடமிருந்தும் அவரது எழுத்துகளிலில் இருந்து கற்றுக்கொள்ள இளைய மற்றும் தற்கால சமுதாயத்திடம் எவ்வளவோ உண்டு… அவரது பிறந்தநாளை நாமும் கொண்டாடுவோம்.
சினோஜ்