இந்திய சுதந்திரத்தின் 75ம் ஆண்டு அமுதப் பெருவிழாவினைச் சிறப்பிக்கும் வகையில் ராக்கிஸ் பார் சோல்ஜர்ஸ் (Rakhis for Soldiers) அமைப்பின் சார்பாக அதன் தலைவர் உத்தரகாண்ட் தமிழ் தருண் விஜய் தலைமையில் இந்தியா முழுவதும் இருந்து இந்திய முப்படை வீரர்களுக்காக தயார் செய்யப்பட்ட ராக்கி கயிறுகளை ஒப்படைக்கும் நிகழ்வு புதுதில்லியில் உள்ள இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் இல்லத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்திய பாதுகாப்பு அமைச்சர் மாண்புமிகு.ராஜ்நாத் சிங் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து முப்படை வீரர்களுக்காக மாணவர்கள், ஆசிரியர்களால் அன்புடன் தயாரிக்கப்பட்ட ராக்கி கயிறுகளைப் பெற்றுக் கொண்டார்.
அல்லும் பகலும் கண் துஞ்சாது நம் தாய்நாடு காக்கும் காவல் தெய்வங்களாகிய முப்படைவீரர்களுக்கு தமிழக ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியரின் அன்பு, நன்றியின் வெளிப்பாடாக 1.5 லட்சம் ராக்கி சகோதரத்துவ கயிறுகளை கரூர் பரணி பார்க் கல்விக் குழும முதன்மை முதல்வர் முனைவர்.சொ.ராமசுப்பிரமணியன் ஒப்படைத்தார்.
இது குறித்து நம்மிடம் பேசிய முனைவர்.ராமசுப்பிரமணயன்,
“நமது இந்திய முப்படை வீரர்களுக்கு சாரணர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் சார்பில் அன்பும் நன்றியும் தெரிவிக்கும் விதமாக கடந்த 2017ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக ராக்கி (சகோதரத்துவ கயிறுகளை) அன்புடன் தயாரித்து அனுப்பி வருகிறோம்.
இந்த ஆண்டு, இந்திய சுதந்திரத்தின் 75ம் ஆண்டு அமுத விழாவை முன்னிட்டு ஆசிரியர்கள் தயாரித்த 75,000 திருக்குறள் பொறித்த ராக்கி கயிறுகள் (18 மொழிகளில் 75,000 திருக்குறள் ராக்கிகள்) ; மேலும் பரணி பார்க் சாரணர் மாணவ மாணவியர் தயாரித்த 75,000 மற்ற ராக்கி கயிறுகள் என மொத்தம் ஒன்றரை லட்சம் ராக்கி கயிறுகளை அனுப்புயுள்ளோம். இந்நிகழ்வின் மூலம் ராக்கி கயிறுகள் வாயிலாக நமது அன்பு மட்டுமல்லாமல் உலகப் பொதுமறை திருக்குறளும் இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் செல்லும் என்பது கூடுதல் மகிழ்ச்சி. விழாவில் இந்திய பாதுகாப்பு அமைச்சரிடம் இருந்து, பாராட்டும், ராணுவ அமைச்சர் திருக்கரங்களால் நமது தாய்நாட்டின் தேசியக் கொடியைப் பெற்றதும் வாழ்நாளில் மறக்க இயலாத உன்னத அனுபவம்“ என்று கூறினார்.
சகோதரத்துவ ராக்கி கயிறுகளைப் பெற்றுக் கொண்ட இந்திய பாதுகாப்பு அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் , “ நாடு காக்கும் காவல் வீரர்களுக்காக தேசம் முழுவதும் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ராக்கி கயிறுகளை அன்புடன் அனுப்பும் இந்நிகழ்வின் மூலம் நமது முப்படை வீரர்கள் அளப்பரிய உற்சாகம் அடைகின்றனர். நமது இந்திய ஒருமைப்பாட்டிற்கு வலு சேர்க்கும் உன்னத தேசபக்த நிகழ்வு இது. இந்த ராக்கி கயிறுகளை நானே எனது பொறுப்பில் முப்படைகளின் தலைவர்களுக்கு அனுப்பி அவர்கள் மூலம் நாடு முழுவதும் முப்படை வீரர்களுக்கு அனுப்பப்படும், “ என்று கூறினார்.
நாட்டுப்பற்றை பறைசாற்றும் இந்நிகழ்வில் நாடு முழுவதும் இருந்து பல்வேறு முன்னணி கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.