தமிழகம் முழுவதும் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் பலர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் மத்திய அரசு 45 வயதிற்கும் அதிகமானோர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொள்ள அனுமதித்துள்ளதால் தமிழகம் முழுவதும் 45 வயதிற்கு அதிகமானோருக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னையில் 45 வயதிற்கு அதிகமானோரில் 55% பேர் இதுவரை முதல் டோஸ் தடுப்பூசி கூட செலுத்திக் கொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை மாநகராட்சியில் 45 வயதிற்கும் அதிகமானோர் 20 லட்சம் பேர் உள்ள நிலையில் இதுவரை 9,01,000 பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மீதமுள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம்களை சென்னை மாநகராட்சி ஏற்படுத்த திட்டமிட்டுள்ள நிலையில் கொரோனா தடுப்பூசி குறித்த வதந்திகளையும் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது.