Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார் என ஜெயலலிதா கையெழுத்திட்டாரா? - சந்தேகம் கிளப்பும் கருணாநிதி

Advertiesment
ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார் என ஜெயலலிதா கையெழுத்திட்டாரா? - சந்தேகம் கிளப்பும் கருணாநிதி
, புதன், 12 அக்டோபர் 2016 (15:31 IST)
முதலமைச்சர் தனது இலாக்களை, அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார் என்று கோப்பிலே கையெழுத்திட்டு அறிவுரை வழங்கியுள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
 

 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’11-10-2016 அன்று என்னுடைய “உடன்பிறப்பு” மடலில், “முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையிலே இருக்கின்ற காரணத்தால், சரியான வழி காட்டுதலின்றி தமிழக அரசே செயல்பாடற்ற நிலையில் திணறிக் கொண்டிருக்கிறது என்பதுதான் அனைவரின் கருத்து.
 
அதிமுக அரசின் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டமோ, அமைச்சரவைக் கூட்டமோ, சட்டமன்றச் சிறப்புக் கூட்டமோ எதுவும் நடத்தப்படவில்லை” என்றும்; “தமிழகத்திலே உள்ள பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் தனித்தனியாக பல்வேறு பிரச்சினைகள் குறித்து அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்கள்.  அதுபற்றியெல்லாம் முடிவெடுத்து, அரசின் நிலை அவ்வப்போது மக்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.
 
முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் முழுமையாக நலம் பெற்று, தன்னுடைய பணியினைத் தொடர்கின்ற வரையில், தமிழக மக்களுக்கு உள்ள அத்தியாவசியத் தேவைகள் நிறைவேற்றப்பட, தீர்க்கப்பட உரிய ஏற்பாடுகள் முறைப்படி, சட்டப்படி மேற்கொள்ளப்பட  வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்” என்று தெரிவித்திருந்தேன்.
 
இதே கருத்தினை தமிழகத்திலே உள்ள மற்ற அரசியல் கட்சித் தலைவர்களும், “இந்து” ராம் போன்ற மூத்த பத்திரிகையாளர்களும் வெளிப்படுத்தியிருந்தார்கள்.
 
அதற்கேற்ப, தமிழக ஆளுநர் அவர்கள் நேற்றிரவு வெளியிட்ட அறிவிப்பில், முதலமைச்சர் ஜெயலலிதா நிர்வகித்து வந்த அனைத்துத் துறைகளும், இந்திய அரசியல் சாசனத்தின் 166 (3)ம் ஷரத்தின்படி நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு தமிழக ஆளுநர் ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார் என்றும், அமைச்சரவைக் கூட்டங்களுக்கு நிதியமைச்சரே தலைமை வகிப்பாரென்றும், இந்த ஏற்பாடுகள்  அனைத்தும் முதலமைச்சரின் அறிவுரையின் பேரில் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசின் நிர்வாகச் செயல்பாடுகள் எக்காரணம் கொண்டும் தேக்க நிலையில் இருந்திட அனுமதிக்காமல்  தொடர்ந்து அரசு இயங்கிட வேண்டும் என்ற நோக்கில் இந்த ஏற்பாடு  செய்யப்பட்டிருப்பதாகவே கருதுகிறேன்.
 
கடந்த 19 நாட்களாக, முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதுடன், மேலும் நீண்ட நாட்கள் மருத்துவமனையிலேயே இருந்திட வேண்டும் என்ற  நிலையில், அவரது உடல்நிலை பற்றி அரசுத் தரப்பில் எந்த விதமான அதிகாரப் பூர்வமான அறிக்கைகளும் இதுவரை வராத நிலையில், பல்வேறு வதந்திகள் உலவிட நேரிட்ட பிறகு, தமிழக  ஆளுநர் மற்றும் கேரள முதலமைச்சர் வரை, ராகுல் காந்தி, வெங்கைய நாயுடு, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் தம்பி மு.க.ஸ்டாலின், மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் “அப்பல்லோ” மருத்துவமனை சென்ற போது, சிகிச்சை பெற்று வரும் முதல் அமைச்சரை நேரில் பார்க்கவோ நலம் விசாரிக்கவோ வாய்ப்பு அளிக்கப்படாத சூழ்நிலையில், நேற்று தமிழக ஆளுநரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை முதலமைச்சரின் அறிவுரையின் பேரில் செய்யப்பட்டுள்ளது என்பது வியப்பைத் தருகிறது.
 
ஏனென்றால் முதலமைச்சர் தனது இலாக்களை, அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார் என்று கோப்பிலே கையெழுத்திட்டு  அறிவுரை வழங்கியுள்ளாரா என்ற கேள்வி ஒரு சிலரிடையே எழுந்துள்ளது. 
 
மேலும், அதிமுகவின் சார்பில் மாநிலங்களவையில் அண்மைக் காலம்வரை உறுப்பினராக இருந்த ஒரு அம்மையாரே முதலமைச்சரின் கையெழுத்தைப் போலியாகப் போட்டு காரியங்கள்  நடப்பதாகக் குற்றஞ்சாட்டியிருக்கிறார். பல்வேறு தரப்பிலும் விவாதிக்கப்படும் இந்தக் குற்றச்சாட்டிற்கு எந்தவிதமான பதிலும் அரசின் சார்பாக இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
 
எப்படியிருந்தபோதிலும், தாமதமாகவேனும், முதலமைச்சரின் இலாகாக்களை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இனி கவனிப்பார் என்று ஆளுநர் செய்துள்ள அறிவிப்பு நிர்வாக வசதிக்கான ஏற்பாடு என்ற வகையில் ஏற்றுக் கொள்ளலாமே தவிர, பொறுப்பு ஆளுநர், புதிய ஏற்பாட்டிற்கு ஒப்புதல் வழங்குவதற்கு முன்பு, அரசியல் சட்டத்தின் பரிமாணங்கள் அனைத்தையும் இந்தக் குறுகிய இடைவெளியில் முழுமையாகப் பரிசீலித்திருப்பாரா என்று எழுந்துள்ள  ஐயப்பாட்டினை அறவே புறக்கணித்து விட முடியாது’’ என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதா நலம் பெற கருணாஸ் சிறப்பு பூஜை!