தமிழகத்தில் தற்போது பரபரப்புடன் பேசப்பட்டு வரும் விஷயம் காவிரி மேலாண்மை அமைப்பது குறித்துதான். 50 ஆண்டு திராவிட கட்சிகளின் வரலாற்றில் முதல்முறையாக ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் கூடி ஆலோசனை செய்து வருவது பொதுமக்களுக்கு நம்பிக்கையை தந்துள்ளது.
இந்த நிலையில் தமிழக பிரதிநிதிகளை பிரதமர் சந்திக்க மறுப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியதாவது: காவிரி விவகாரத்தில் திமுக துரோகம் செய்ததற்காக ஸ்டாலின் மக்களிடம் தோப்புக்கரணம் போடவேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் பிரதமர் சந்திக்க மறுப்பதாக கூறுவது பொய்; வாரியம் அமைப்பதற்காக மத்திய அரசுக்கு காலக்கெடு விதிக்கமுடியாது' என்று கூறியுள்ளார்.
காவிரி மேலாண்மை விஷயத்தில் முழுக்க முழுக்க அரசியல் நடப்பதாகவும், கர்நாடக மாநில சட்டசபை தேர்தலையொட்டியே இந்த விஷயத்தில் பாஜக மெளனம் சாதிப்பதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி உள்பட மற்ற காங்கிரஸ் தலைவர்களும் இதே காரணத்திற்காக இந்த விஷயத்தில் மெளனம் காக்கின்றனர் என்பது வேதனையான விஷயம். காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்திக்கு ஸ்டாலின் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும், காங்கிரஸ் இந்த விஷயத்தில் உதவிக்கு வராவிட்டால் கூட்டணி இல்லை என்று ஸ்டாலின் மிரட்ட வேண்டும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.