பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது வாக்காளர் அட்டையை வெளியிட்டுள்ளார்.
நடிகர் விஜய் நடித்து வெளியான மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி குறித்து தவறான கருத்து கூறப்பட்டதாக கூறி தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் ஹெச்.ராஜா போன்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், விஜயை ‘ஜோசப் விஜய்’ என ஹெச்.ராஜா மத ரீதியாக விமர்சித்தார். அதோடு, விஜயின் வாக்களர் அட்டையின் நகலையும் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு அவர் ஜோசப் விஜய்தான் என விமர்சனம் செய்தார்.
எனவே, கோபமடைந்த பலர், உங்களது பெயர் ராஜா ஹரிஹர சர்மாவாமே. முடிந்தால் உங்களது வாக்களர் அட்டையையும் வெளியிடுங்களேன் என டிவிட்டரில் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து, ராஜா டிவிட்டரில் தனது வாக்காளர் அட்டையை வெளியிட்டுள்ளார். அதில், அவரின் பெயர் ராஜா என இருக்கிறது. உறவினரின் பெயர் ஹரிஹரன் என அச்சிடப்பட்டுள்ளது. அதில் சர்மா இல்லை.
ஆனால், விக்கிபீடியாவில் அவரது தந்தையின் பெயர் ஹரிஹர சர்மா என பதிவிடப்பட்டுள்ளது. அதை எடுத்து “தல உங்க தந்தை பெயருடன் சர்மா இணைந்துள்ளது. ஆனால் உங்கள் பெயரில் சர்மா என்ற சாதி பெயர் இல்லை என்றால் பெரியாரின் சாதி ஒழிப்பு வெற்றியே” என ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.