கடுமையான உடற்பயிற்சி செய்ததன் காரணமாக சென்னையை சேர்ந்த ஜிம் மாஸ்டர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஆவடி அருகே நெமிலிச்சேரி என்ற பகுதியைச் சேர்ந்த ஜிம் மாஸ்டர் ஆகாஷ். 25 வயதான இவர், ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கடந்த சில நாட்களாக கடுமையாக உயர்ச்சி செய்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த 22ஆம் தேதி அவர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது திடீரென ரத்த வாந்தி எடுத்ததை அடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை கொடுத்து வந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுமஸ்தான உடலுக்காக ஆகாஷ் அதிக அளவு ஸ்டிராய்டு மருந்து எடுத்துக் கொண்டதாகவும் அதிக நேரம் உடற்பயிற்சி செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.