சென்னை-சேலம் பசுமை சாலைக்காக சேலம் அருகே நில அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை சூழ்ந்து கொண்டு விவசாயிகள் கதறி அழுதனர்.
சேலம் மாவட்டத்தில் அமைய உள்ள 8 வழி பசுமை சாலைக்கு எதிராக சேலம் மாவட்டம் மக்கள் போராட்டம் செய்து வருகின்றனர். இதுதொடர்பாக போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர்களை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் மக்கள் அனைவரும் பெரும்பாலும் இந்த பசுமை வழி சாலைக்கு எதிரான கருத்தையே தெரிவித்து வருகின்றனர். இயற்கை வளங்களை அழித்து அமைக்க போகும் இந்த சாலைக்கு ஏன் அரசு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் தமிழக அரசோ சாலை அமைத்தே தீருவோம் என்று விடாப்பிடியாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் பசுமை வழிச் சாலைக்காக சேலம் அருகே நேற்று 5-வது நாளாக நிலம் அளவிடும் பணி நடந்தது. அப்போது விவசாயிகள் தங்களது நிலம் பறிபோவதாகவும், எங்களுக்கு சோறு போடும் நிலத்தை இப்படி அடித்து அபகரிக்கிறீர்களே என ஒப்பாரி வைத்து கதறி அழுதனர். இருந்தபோதிலும் அதிகாரிகள், நிலத்தை அளக்கும் பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.