காவிரி நீர் தொடர்பாக தமிழகத்தில் நடைபெறும் போரட்டங்களை ஒடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின்பும் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. இது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் தீவிரமாக போராட்டங்களை முன்னெடுத்துள்ளன.
இந்நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் நேற்று டெல்லி அழைக்கப்பட்டார். அங்கு சென்ற அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது, மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்கிற அசைன்மெண்ட் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது.
இதையடுத்து உடனடியாக சென்னை திரும்பிய ஆளுநர், உடனடியாக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டி.ஜி.பி உள்ளிட்ட சில அதிகாரிகளை ஆளுனர் மாளிகைக்கு அழைத்து பேசினாராம். அப்போது, காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் மத்திய அரசுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களை தொடக்கத்திலேயே ஏன் ஓடுக்கவில்லை? என கேள்வி எழுப்பினாராம். மேலும், இந்த விஷயத்தில் தமிழக அரசு மென்மையாக நடந்து கொள்கிறது எனவும், உடனடியாக போராட்டங்களை அடக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டாராம்.