சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் தனது உரையை வாசிக்காமல் வெளியேறியதை எடுத்து அந்த உரையை சபாநாயகர் அப்பாவு அவர்கள் வாசித்தார்.
சட்டப்பேரவையில் இன்று தொடங்கியவுடன் அரசு தயாரித்த உரையை ஆளுனர் ரவி வாசிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சட்டப்பேரவையில் முதலில் தேசிய கீதம் ஒலிக்க வேண்டும் என்று ஆளுநர் கோரிக்கை வைத்த நிலையில், அவரது கோரிக்கை ஏற்கப்படாமல் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
இதனை அடுத்து, மூன்று நிமிடங்கள் மட்டுமே இருந்த ஆளுநர் உடனடியாக சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். இதன் காரணமாக, ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு அவர்கள் வாசித்தார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் 2322 கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டதாகவும், 688 கோடி மதிப்புள்ள 7 133 ஏக்கர் கோவில் நிலம் மீட்கப்பட்டதாகவும் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தில் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் படித்து 256 பேர் அர்ச்சகர் ஆகியுள்ளனர் என்றும் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சட்டப்பேரவைக்கு வெளியே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்த போது, ஆளுநர் உரை காற்றடித்த பலூன் போல் உள்ளது என்றும், உள்ளே எதுவும் இல்லை என்றும் கூறினார்.