தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று கடலூரில் ஆய்வு மேற்கொள்ள சென்றார். ஆய்வுக்கு சென்ற அவர் சென்னைக்கு திரும்பியபோது அவரது பாதுகாப்பு கார் மோதியதில் இரண்டு பேர் பலியாகியுள்ளனர்.
தமிழக ஆளுநராக பதவியேற்றுக்கொண்ட பன்வாரிலால் புரோஹித், சமீபத்தில் கோவையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பல சர்ச்சைகள் எழுந்தது. அதனையடுத்து ஆளுநர் கடலூரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக கூறப்பட்டது. அதன் படி அவர் இன்று கடலூரில் ஆய்வு மேற்கொண்டார். அவருக்கு திமுகவினர் கருப்புக்கொடி காட்டினர்.
இதனால் ஆளுநரின் ஆய்வுப்பயண திட்டம் மாறிப்போனது. அவர் கடலூரில் வண்டிப்பாளையம், அம்பேத்கர் நகர் முதலான பகுதிகளில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வு முடிந்த பின்னர் ஆளுநர் சென்னை திரும்பிக்கொண்டிருந்தார். அவரது பாதுகாப்பு கார் மாமல்லபுரம் வந்துகொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது.
அதிவேகத்தில் வந்த ஆளுநரின் பாதுகாப்பு கார் சாலையை கடக்க முயன்றவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் இரண்டு பேர் பலியாகினர்.