இன்று காலை சென்னையில் உள்ள கோவிலுக்கு சென்றதாகவும் அப்போது இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவிலில் பணிபுரியும் பூசாரிகளின் கண்களில் பயம் மற்றும் அச்சத்தை பார்த்தேன் என்றும் கவர்னர் ரவி தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அயோத்தியில் ராமர் கோயில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் வாய்மொழி உத்தரவாக சிறப்பு பூஜைகள் நடைபெறக்கூடாது என்று தமிழக அரசு வலியுறுத்தியதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன.
இந்த நிலையில் கவர்னர் ஆர்பி சற்றுமுன் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருப்பதாவது: இன்று காலை சென்னை, மேற்கு மாம்பலம் அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயிலுக்குச் சென்று, அனைவரும் நலம்பெற பிரபு ஸ்ரீராமரிடம் பிரார்த்தனை செய்தேன். இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ளது.
பூசாரிகள் மற்றும் கோயில் ஊழியர்களின் முகங்களில் கண்ணுக்குப் புலப்படாத பயம் மற்றும் மிகப்பெரிய அச்ச உணர்வு இருந்தது. நாட்டின் பிற பகுதிகளில் கொண்டாடப்படும் பண்டிகை சூழலுக்கு முற்றிலும் அது மாறுபட்டிருந்தது. பால ராமர் பிராண பிரதிஷ்டையை நாடு முழுவதும் கொண்டாடும் போது, அக்கோயில் வளாகம், கடுமையான அடக்குமுறையின் உணர்வை வெளிப்படுத்துகிறது." - ஆளுநர் ரவி