சசிகலாவிற்கு ஆதரவு அளித்துள்ளாதாக கூறப்படும் கடிதத்தில், அதிமுக எம்.எல்.ஏக்களின் கையெழுத்தை பரிசோதிக்க வேண்டும் என ஆளுநர் தரப்பு கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது...
தமிழகத்தின் ஆட்சியை அமைக்கப் போவது ஓ.பன்னீர் செல்வமா அல்லது சசிகலாவா என்பதைத்தான் தமிழகம் பரபரப்பாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
இது தொடர்பாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் சசிகலா ஆகியோர் நேற்று ஆளுநரை சந்தித்து பேசினார். அப்போது, அதிமுக எம்.எ.ஏக்கள் 129 பேரின் ஆதரவு தனக்கு இருப்பதால், தன்னை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் எனவும் சசிகலா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், அதிமுக எம்.எல்.ஏக்களை சட்ட விரோதமாக, கடத்திச் சென்று சசிகலா தரப்பு சிறை வைத்துள்ளதாக ஓ.பி.எஸ் ஆளுநரிடம் முறையிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், சசிகலா வெற்றுக் காகிகத்தில் கட்டாயப்படுத்தி அதிமுக எம்.எல்.ஏக்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டு, அது தற்போது பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதில் சில போலி கையெழுத்து எனவும் ஓ.பி.எஸ் தரப்பில் ஆளுநரிடம் புகார் தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது.
எனவே, சசிகலா அளித்துள்ள ஆதரவுக் கடிதத்தில் உள்ள அதிமுக எம்.எல்.ஏக்களின் கையெழுத்தை அதிமுகவின் முக்கிய மூத்த நிர்வாகிகள் மற்றும் சட்டசபை சபாநாயகர் ஆகியோரை வைத்து ஆளுநர் பரிசோதிக்க முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இதற்கு சசிகலா தரப்பும் ஒத்துக் கொண்டதாக தெரிகிறது.