ஊக்கமருந்து சோதனையில் சிக்கியுள்ள கோமதி மாரிமுத்து மற்றுமொரு சோதனைக்காக கத்தார் சென்றுள்ளார்.
கடந்த மாதம் தோஹாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் தடகள போட்டியில் 800 மீட்டர் ஓட்டபந்தய பிரிவில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து. தமிழகத்தைச் சேர்ந்த அவருக்கு இந்தியா முழுவதும் பாராட்டுகள் குவிந்து வரும் வேளையில் அவர் போட்டிகளின் போது ஊக்கமருந்து பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
தடைசெய்யப்பட்ட நாண்ட்ரோலான் எனப்படும் மருந்தை அவர் உபயோகப்படுத்தியதாக அவரது சிறுநீர் சோதனை (.A சாம்பிள்) சோதனையின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டதாக ஆசிய தடகள சம்மேளனம் தெரிவித்தது. இதனால் அவருக்கு இடைக்காலத்தடை விதிக்கப்பட்டது. மற்றுமொரு சோதனைக்காக (B சாம்பிள்) அவர் இப்போது கத்தார் சென்றுள்ளார்.
இந்த சோதனையில் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக நிரூபிக்கப்பட்டால் அவர் வாங்கிய தங்கப்பதக்கம் பறிமுதல் செய்யப்படும். இந்நிலையில் கோமதி மாரிமுத்து அவர் மீதான குற்றச்சாட்டுக்குப் பதில் அளிக்கையில் ‘ அவர்கள் சொல்லும் ஊக்கமருந்தின் பெயர் கூட எனக்குத் தெரியாது. பி சாம்பிள் முடிவுகளுக்காக காத்திருக்கிறேன். என் மீதான் குற்றச்சாட்டு ஓயும்வரை ஓயமாட்டேன்’ எனத் தெரிவித்துள்ளார்.