தாய்லாந்தில் இருந்து சென்னை வந்த விமானத்தின் கழிவறை மற்றும் இருக்கையில் மறைத்து கடத்திய 3½ கிலோ தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில், வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலையத்தை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், தாய்லாந்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் விமானத்தில் இருந்து சந்தேகப்படும்படியாக இறங்கி வந்த பயணிகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். ஆனால் தங்கம் எதுவும் சிக்கவில்லை.
பின்னர், மீண்டும் டெல்லிக்கு செல்ல வேண்டியிருந்த விமானத்தை ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது விமானத்தில் இருந்த ஒரு இருக்கையின் அடியிலும், விமானத்தின் கழிவறையிலும் பை ஒன்று இருந்துள்ளது.
இந்த பைகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். இருக்கைக்கு அடியில் இருந்த பையில் 500 கிராம் எடை கொண்ட 5 தங்க கட்டிகளையும், கழிவறையில் கிடந்த பையில் இருந்து 100 கிராம் எடை கொண்ட 11 தங்க கட்டிகளையும் கைப்பற்றியுள்ளனர்.