ரியல் எஸ்டேட் அதிபரின் மனைவி மர்மமாக இறந்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி தில்லை நகர் பகுதியில் வசித்து வரும் ரியல் எஸ்டேட் அதிபர் கணபதி. இவரின் மனைவி ஜனனி (28). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணபதி அதே பகுதியில் ரியல் எஸ்டேட் அலுவலகம் வைத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜனனியை மயங்கிய நிலையில், திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு காரில் கணபதி சென்றார். ஜனனி தூக்கில் தொங்கி தற்கொலைக்கு முயன்றதாகவும், அவரை காப்பாற்றுமாறும் அவர் மருத்துவர்களிடம் கூறினார். ஆனால், ஜனனியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், அவரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய திருச்சி அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு கணபதியிடம் வலியுறுத்தினர்.
ஆனால், கணபதி அங்கு செல்லாமல், ஜனனியின் உடலை தனது சொந்த ஊரான கண்டிராதித்தத்துக்கு கொண்டு சென்று யாருக்கும் தெரியாமல் எரிக்க திட்டமிட்டார். இதற்கிடையில், அந்த தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர் இந்த தகவலை போலீசாரிடம் தெரிவித்துவிட்டனர். போலீசார் தன்னை தேடுவதை அறிந்த கணபதி தலைமறைவாகிவிட்டார்.
மேலும், ஜனனியின் தந்தை இது தொடர்பாக ஸ்ரீரங்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தன் மகளை வரதட்சனை கேட்டு கணபதியும், அவரது குடும்பத்தினர் அடித்து கொடுமைப்படுத்தி வந்தனர். எனவே, அவர்கள்தான் என் மகளை கொலை செய்திருக்கவேண்டும்” என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, விசாரணையில் இறங்கிய போலீசார் தலைமறைவான கணபதியை கண்டுபிடித்து கைது செய்தனர். தற்போது அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.