இந்திய கலாச்சாரத்தின் மீது ஈர்ப்பு கொண்ட ஜெர்மனி நாட்டை சேர்ந்த இளைஞர் கன்னியாக்குமரியை சேர்ந்த தமிழ் பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
கன்னியாக்குமரி மாவட்டம் ராஜாவூர் பகுதியை சேர்ந்தவர் லாசர். இவருக்கு அனு விண்ணிமேரி என்ற மகள் உள்ளார். பட்ட மேற்படிப்புக்காக ஜெர்மனி சென்ற அனு விண்ணிமேரி அங்குள்ள பல்கலைகழகம் ஒன்றில் பயோ பிசிக்ஸ் படித்துள்ளார். பின்னர் ஜெர்மனியில் உள்ள ஆய்வகம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார்.
அந்த ஆய்வகத்தில் ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர் பேட்ரிக் சிக்பிரிட் கோடல் என்பவரும் பணியாற்றி வந்துள்ளார். அனு விண்ணிமேரிக்கும் அவருக்கு முதல் ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மாறியுள்ளது. இந்தியா குறித்தும், அதன் கலாச்சாரம் குறித்தும் விண்ணிமேரி கூறியவற்றை கேட்ட பேட்ரிக்கிற்கு இந்தியா மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது.
பின்னர் விண்ணிமேரியிடம் தனது காதலை தெரிவித்துள்ளார். அதை ஏற்றுக் கொண்ட விண்ணிமேரி தனது வீட்டில் சம்மதம் கேட்க அவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். இதையடுத்து ஜெர்மனியில் இருந்து தனது உறவினர் மற்றும் நண்பர்களுடன் கன்னியாக்குமரி வந்த பேட்ரிக் அங்கு கிறிஸ்தவ முறைப்படி விண்ணிமேரியை திருமணம் செய்து கொண்டுள்ளார்.