சமூக வலைத்தளங்களில் பெண்களிடம் மோசமாக பேசும் நபர்களுக்கு தகுந்த தண்டனை வாங்கிக் கொடுப்பேன் என நடிகையும், நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் டிவிட்டரில் வெடித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தனது பெயரைக் கெடுத்துக் கொண்டவர் நடிகை காயத்ரி ரகுராம். அந்த நிகழ்ச்சியில் அவர் நடந்து கொண்ட விதம் பலருக்கும் அவர் மீது வெறுப்பை ஏற்படுத்தியது. தற்போது, அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் சில கருத்துகள் மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
ஆனால், சமூக வலைத்தளங்களில் பெண்களை குறிப்பாக மோசமாக விமர்சிக்கும் கும்பல் காயத்ரி ரகுராமையும் தொடர்ந்து மோசமான வார்த்தைகளாலேயே அர்ச்சித்து வந்தது.
இந்நிலையில், காயத்ரி தனது டிவிட்டர் பக்கத்தில் “என்னையோ, ஜூலியையோ அல்லது யாராக இருந்தாலும் சரி, இணையத்தில் பெண்களை மோசமாக விமர்சிப்பது, கெட்ட வார்த்தையால் திட்டுவது போன்றவை முடிவிற்கு வர வேண்டும். இல்லையேல், அவர்களை கண்டுபிடித்து நான் சைபர் கிரைமிடம் புகார் கொடுத்து, தகுந்த தண்டனை வாங்கிக் கொடுப்பேன். அது தனி மனிதராக இருந்தாலும் சரி அல்லது நிறுவனமாக இருந்தாலும் சரி. அதை நான் கண்டிப்பாக செய்வேன்” என ஒரு பதிவை இட்டிருந்தார்.
அதைப் பார்த்த ஒருவர், சமூக வலைத்தளங்களிலிருந்து வெளியேறி விடுங்கள். அதை அனைவருக்கும் நல்லது என கிண்டலாக கருத்துக் கூறியிருந்தார்.
அதற்கு பதிலளித்த காயத்ரி “நான் பயந்து செல்லமாட்டேன். அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுப்பேன். பொறுமையை இழந்துவிட்டேன். மகளிர் தினத்தில் இதைக் கூறுகிறேன். நான் யாரையும் தொந்தரவு செய்வதில்லை. அதேபோல், என்ன யார் தொந்தரவு செய்தாலும், கெட்ட வார்த்தையால் திட்டினாலும் அதை அனுமதிக்க மாட்டேன்” என வெடித்துள்ளார்.