இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது முட்டாள் தனமானது: கங்கை அமரன் சீற்றம்!
இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது முட்டாள் தனமானது: கங்கை அமரன் சீற்றம்!
இசையமைப்பாளர் இளையராஜா தனது பாடல்களை பொது நிகழ்ச்சிகளில் தனது அனுமதியில்லாமல் பாடக்கூடாது என பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இதனையடுத்து இளையராஜாவின் இந்த நடவடிக்கையை அவரது சகோதரர் கங்கை அமரன் கடுமையாக விமர்சித்து சாடியுள்ளார். அவரது இந்த முடிவை முட்டாள் தனமான முடிவு என கூறியுள்ளார் கங்கை அமரன்.
நான்தான் என்ற அகங்காரம் இளையராஜாவுக்கு இருக்கக்கூடாது. தனது பாடலை பாடக்கூடாது என கூற இளையராஜாவுக்கு உரிமை இல்லை. சங்கீதம் என்ற பொதுச்சொத்துக்கு யாரும் தடை போட முடியாது. தியாகராஜருக்கு இளையராஜா ராயல்டி கொடுத்தாரா? என கேள்வி எழுப்பியுள்ளார் கங்கை அமரன்.
மேலும், இளையராஜாவின் இசை மழையைப் போன்றது. அதனை யார் வேண்டுமானாலும் அனுபவிக்கலாம். இளையராஜாவின் இசையை மக்கள் அனைவரும் ரசிக்கின்றனர். தனது இசைக்கு இளையராஜா காப்புரிமை கேட்பது முறையல்ல. இது முட்டாள்தனமானது.
அவரது இசைக்கு நான் எத்தனையோ பாடல்களை எழுதியுள்ளேன். அந்த பாடல் வரிகளை எல்லாம் இளையராஜா பயன்படுத்த கூடாது என்று கூறினால் எவ்வளவு அபத்தமாக இருக்கும் என்பதை எண்ணி பார்க்க வேண்டும் என்றார்.