நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையில் திமுகவுடன் சுமூகமான போக்கு நிலவுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக தமிழ்நாட்டின் 39 தொகுதிகளிலும் வெற்றி பெற தீவிரமான களப்பணியில் இறங்கியுள்ளது. இந்நிலையில் திமுகவுடன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு குறித்தும் தீவிர பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இன்று மதிமுக, விசிக, அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடனான மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அதன் பின்னர் பேசிய அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி கே.சுப்பராயன், திருப்தி அளிக்கும் வகையில் திமுகவுடனான தொகுதி பங்கீடு உடன்பாடு உள்ளதாகவும், தாங்கள் கடந்த மக்களவை தேர்தலில் வெற்றிப் பெற்ற அதே திருப்பூர், நாகை தொகுதிகளை வழங்குமாறு கேட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
திருப்பூர் மற்றும் நாகப்பட்டிணத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு செல்வாக்கு இருப்பதால் இந்த முறையும் இந்த தொகுதிகளில் போட்டியிட அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.