Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழ்நாடு அரசு சார்பில் முழு ஒத்துழைப்பு: அமைச்சர் மா சுப்பிரமணியன்

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழ்நாடு அரசு சார்பில் முழு ஒத்துழைப்பு: அமைச்சர் மா சுப்பிரமணியன்

Siva

, திங்கள், 7 அக்டோபர் 2024 (06:55 IST)
சென்னை விமான சாகச நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: 
 
சென்னையில் இந்திய விமானப் படையின் வான்வழி சாகச நிகழ்ச்சியினைச் சிறப்பாக நடத்திடத் தமிழ்நாடு அரசின் நிர்வாகரீதியிலான முழு ஒத்துழைப்பும் வழங்கப்பட்டது. 
 
இந்நிகழ்ச்சியை முறையாகத் திட்டமிட்டு நடத்துவதற்காகத் தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில் ஒருங்கிணைப்புக் கூட்டம் இந்திய விமானப்படை அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசுத் துறை அலுவலர்களுடன் ஒருமுறையும் பின்னர் துறை அளவில் பலமுறையும் நடத்தப்பட்டன. 
 
இந்த ஆலோசனைக் கூட்டங்களில் விமானப் படை அதிகாரிகள் கோரிய அனைத்தும் கவனத்தில் கொண்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 
 
நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் மாநில அரசின் சார்பாக இரண்டு சுகாதாரக் குழுக்கள், போதுமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டது.
 
இது மட்டுமின்றி இந்திய இராணுவத்தின் சார்பாகவும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இது தவிர அவசர மருத்துவ உதவிக்காக 40 ஆம்புலன்சுகளும் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.
போதுமான அளவு பாராமெடிக்கல் குழுக்களும் அமைக்கப்பட்டு இருந்தன. 
 
ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 100 படுக்கைகளும் 65 மருத்துவர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். 
 
சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் மூலமாக மெரினா கடற்கரையில் போதுமான எண்ணிக்கையில் தற்காலிக கழிவறைகள் மற்றும் குடிநீர் வழங்கலுக்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. 
 
அதிகளவில் பொதுமக்கள் வரும் வாய்ப்பு உள்ளதைக் கருத்தில்கொண்டு 7500 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 
 
சென்னையில் இன்று நடைபெற்ற இந்திய விமானப் படையின் நிகழ்ச்சிக்கு அவர்கள் கோரியதற்கு மேலாகவே அனைத்து வசதிகளும் ஏற்பாடுகளும் தமிழ்நாடு அரசால் செய்து தரப்பட்டன என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!