கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் கேஸ்ட்ரோவின் மூத்த மகன் டியாஜ் பலார்ட், மனஅழுத்தம் காரணமாக, தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கியூப புரட்சியாளரும் அந்நாட்டின் முன்னாள் அதிபருமான, பிடல் கேஸ்ட்ரோ கல்லூரியில் பயிலும்போதே கம்யூனிச கட்சிகளில் சேர்ந்து கியூபாவில் 1959 இல் புரட்சியை வழிநடத்தி புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவின் அரசை வீழ்த்தி தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்றார். 1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும், 1976 முதல் 2008 வரை ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார்.
பிடலின் மூத்த மகன் டியாஜ் பலார்ட்(68) அணு இயற்பியல் படித்துள்ளார், கியூபா அகாடமி ஆப் சயின்ஸ் மையத்தின் துணை தலைவராகவும் மற்றும் கியூபா அரசின் அறிவியல் ஆலோசகராகவும் பணியாற்றி வந்தார். சமீபகாலமாக மன அழுத்தத்தால் பாதித்திருந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி, வீட்டிலேயே தங்கி சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
பிடல் கேஸ்ட்ரோ கடந்த 2016ம் ஆண்டு நவம்பரில் 90வது வயதில் மரணமடைந்தார். இப்போது அவரது மகன் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் கியூபா மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.