கோவை விமான நிலையத்தில் இரண்டு இட்லி ஒரு வடை ரூபாய் 200க்கு விற்கப்படுவதாக விமான பயணிகள் அதிருப்தியுடன் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை விமான நிலையம் தற்போது பிஸியான விமான நிலையங்களில் ஒன்றாக மாறி வருகிறது. தினமும் 25க்கும் மேற்பட்ட விமானங்கள் இந்த விமான நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில் இந்த விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் பயணிகளுடன் வரும் உறவினர்கள் அங்குள்ள உணவகங்களில் சாப்பிடும் போது விலையை கேட்டு அதிர்ச்சி அடைகின்றனர். இரண்டு இட்லி ஒரு வடை 200 ரூபாய் என்றும் சாம்பார் இட்லி 90 ரூபாய் என்றும் புரோட்டா சப்பாத்தி 200 ரூபாய் என்றும் ஆனியன் தோசை 220 என்றும் விற்கப்பட்டு வருகின்றன
காலை 8 மணி விமானத்தில் பயணம் செய்ய வேண்டிய பயணிகள் 5 மணிக்கு எல்லாம் புறப்பட்டு ஆறு மணிக்கே விமான நிலையத்துக்கு வருவதால் அவசர அவசரமாக விமான நிலையத்தில் உள்ள உணவகங்களில் சாப்பிடும் போது கொள்ளை விலையை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்