மோடி வருகையால் பலூன்கள் பறக்க முதல் முறையாக குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி முதன்முறையாக தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. ஜூலை 28 ஆம் தேதி தொடங்கும் இந்த போட்டிகள் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக தமிழ்நாடே கோலாகலமாக தயாராகி வருகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக ஏ.ஆர்.ரஹ்மான் தனி பாடல் வெளியிட்ட நிலையில், சென்னையில் உள்ள நேப்பியர் பாலம் செஸ் பலகை போல அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் ஜூலை 28 ஆம் தேதி மாலை நடைபெறவுள்ளது. இதில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்று போட்டியைத் தொடக்கி வைக்கிறாா். அன்று தமிழ்நாடு ஆளுநா் மாளிகையில் தங்கும் மோடொ, மறு நாள் ஜூலை 29 ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுப் பேசுகிறாா்.
மோடி வருகையையொட்டி, சென்னையில் இரு நாள்கள் பலூன்களை பறக்கவிடுவதற்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144-இன் கீழ் காவல்துறை தடை விதித்துள்ளது. பலூன்கள் பறக்க குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் தடை விதிக்கப் படுவது இதுவே முதல் முறை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.