மீனவர்களின் வாழ்க்கையைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 73 பேரையும், அவர்களது 101 படகுகளையும் இலங்கை அரசு உடனே விடுதலை செய்யவேண்டும். மேலும், இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் ஏற்படாத வகையில் தமிழக அரசும், மத்திய அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக மீனவர்களைக் கைது செய்யும்போதும் பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதுகிறார். அடுத்து, மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கை அரசுக்கு கடிதம் எழுதுகிறார். இது போன்ற கடிதங்கள் மட்டுமே சென்று வருகிறதே தவிர, ஆக்கபூர்வமான எந்த முன்னேற்றமும் இல்லை.
எனவே, அமைதியில்லாமல் வாழும் தமிழக மீனவர்களின் வாழ்க்கைக்கு பாதுகாப்பான நிலையை உருவாக்க மத்திய, மாநில அரசுகள் உடனே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.