சென்னையில் சினிமா பைனான்சியர் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அடுத்த ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சினிமா பைனான்சியர் பாஸ்கரன். இவர் கட்டுமான தொழிலும் செய்து வந்துள்ளார். ராம்கி நடித்த சாம்ராட் மற்றும் ஒயிட் ஆகிய படங்களை தயாரித்த இவர் தற்போது பட தயாரிப்பு பணிகளை விடுத்து தனது மகன்களுடன் வாழ்ந்து வந்துள்ளார்.
2 நாட்களுக்கு முன்பாக காரில் வெளியே சென்ற பாஸ்கரன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பாஸ்கரின் மகன்கள் கவலைக் கொண்ட நிலையில், நண்பர் ஒருவர் வீட்டு நிகழ்ச்சி ஒன்றிற்காக வெளியூர் செல்வதாக பாஸ்கரன் செல்லில் இருந்து குறுஞ்செய்தி வந்துள்ளது.
ஆனால் அதற்கு பிறகு பாஸ்கரன் எண் ஸ்விட்ச் ஆப் ஆகியுள்ளது. இதனால் பாஸ்கரனை தேடி பார்த்துவிட்டு அவரது மகன்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் நேற்று விருகம்பாக்கம் சின்மயா நகர் கூவம் ஆற்றின் அருகே பிளாஸ்டிக் பையில் கட்டப்பட்ட நிலையில் 69 வயது ஆண் சடலம் கிடைத்துள்ளது.
விசாரணையில் அது மாயமான பாஸ்கரன் என்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்திய போலீஸார் பிணம் கண்டெடுக்கப்பட்ட இடத்திலிருந்து சுமார் 2கி.மீ தொலைவிற்கு அப்பால் குடியிருப்பு கட்டிடம் அருகே பாஸ்கரனின் காரை கண்டுபிடித்துள்ளனர்.
அந்த குடியிருப்பு கட்டிடத்தில் விசாரணை மேற்கொண்டபோது அக்கட்டிடத்தில் வசித்து வந்த கணேசன் என்பவர் சம்பவத்தன்று அவசரமாக வீட்டை பூட்டி விட்டு சென்றது தெரிய வந்துள்ளது. இதையடுத்து கணேசனை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணேசன் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் தரகர் வேலை செய்பவர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
பைனான்சியர் பாஸ்கரன் இறந்ததற்கு முன்பகை அல்லது தொழில் போட்டி காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.