மன்னார்குடியில் தினகரன் - திவாகரன் மோதல் : கொதித்தெழுந்த சசிகலா
, புதன், 12 ஜூலை 2017 (11:20 IST)
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி சசிகலாவின் சகோதரர் திவாகரன், மன்னார்குடியில் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டிருந்ததை, தினகரன் தடுத்து நிறுத்திய சம்பவம் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜாமீனில் வெளியே வந்த பின், தனக்கென ஆதரவாளர்கள் கூட்டத்தை உருவாக்குவதில் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரரன் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். தினகரனுக்கு ஆதரவாக தமிழகமெங்கும் பொதுக்கூட்டங்களை நாஞ்சில் சம்பத் மற்றும் புகழேந்தி உள்ளிட்டோர் நடத்தி வருகின்றனர். இந்த வகையில், கடந்த ஜூன் மாதம் தினகரனின் சொந்த ஊரான மன்னார்குடியிலும் பொதுக்கூட்டம் நடத்த அவர்களின் தரப்பில் போலீசாரிடம் அனுமதி பெறப்பட்டது.
ஆனால், அந்த பகுதி காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்ட திவாகரன், இந்த பொதுக்கூட்டம் நடைபெறக்கூடாது என உத்தரவு பிறப்பித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த கூட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். அந்த விவகாரம் தினகரன் மற்றும் அவரின் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில், திவாகரன் தரப்பில் மன்னார்குடியில் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டனர். அதற்காக வைக்கப்பட்டிருந்த பேனரில், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா, திவாகரன் மற்றும் அவரது மகன் ஜெயானந்த் ஆகியோரின் படங்கள் மட்டும் இடம் பெற்றிருந்தன. தினகரனின் படம் அதில் இடம் பெறவில்லை.
அந்நிலையில், சமீபத்தில் பெங்களூர் சென்று சசிகலா சந்தித்து பேசிய தினகரன், மன்னார்குடியில் திவாகரன் தரப்பு பொதுக்கூட்டத்தை நடத்தினால், எனது ஆதரவாளர்களும் போட்டி பொதுக்கூட்டத்தை நடத்துவார்கள் என கூறியதாக தெரிகிறது.
தனது சொந்த ஊரிலேயே தனது குடும்ப உறுப்பினர்கள் மோதிக்கொள்வதை கண்டு கொதித்தெழுந்த சசிகலா, உச்ச நீதிமன்றத்தில் தன்னுடைய சீராய்வு மனு விசாரணைக்கு வரும் சூழ்நிலையில், பொதுக்கூட்டம், போட்டி கூட்டம் என நடத்தி கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம். எனவே, அதை ரத்து செய்து விடு என திவாகரனிடம் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து, அந்த கூட்டம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்