Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விவசாயிகளே இயற்கையை காக்கும் மருத்துவர்கள்! காவேரி கூக்குரலின் மிளகு சாகுபடி கருத்தரங்கை தொடங்கி வைத்து அமைச்சர் பேச்சு!

Advertiesment
Kaveri Kookural

Prasanth Karthick

, ஞாயிறு, 28 ஏப்ரல் 2024 (19:27 IST)
ஈஷாவின் காவேரி கூக்குரல் சார்பில் 'லட்சங்களை அள்ளித்தரும் சமவெளியில் மிளகு சாத்தியமே' எனும் மாபெரும் கருத்தரங்கு புதுக்கோட்டை மற்றும் மயிலாடுதுறையில் இன்று (28-04-2024) நடைபெற்றது. இக்கருத்தரங்கை தொடங்கி வைத்து சுற்றுச்சுழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு. வீ. மெய்யநாதன் விவசாயிகளே இயற்கையை காக்கும் மருத்துவர்கள் என்று பெருமிதத்துடன் கூறினார்.


 
மலை சார்ந்த இடங்களில் மட்டுமே விளையும் என்று அனைவராலும் அறியப்பட்ட மசாலா பயிர் வகையான மிளகு, சமவெளியிலும் சிறப்பாக விளையும் என்பதை அனைத்து விவசாயிகளுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் மிளகு சாகுபடி குறித்த கருத்தரங்கை காவேரி கூக்குரல் இயக்கம் ஒரே நாளில் தமிழ்நாட்டில் நான்கு இடங்களில் நடத்தியது.

இக்கருத்தரங்கு புதுக்கோட்டையில் ஆலங்குடி தாலுக்கா, அனவயலில்  அமைந்துள்ள முன்னோடி மிளகு விவசாயி திரு. ராஜாகண்ணு அவர்களின் பண்ணையிலும், மயிலாடுதுறையில் அரையபுரம் பகுதியில் அமைந்துள்ள ஆசிரியர் வீரமணி அவர்களின் தோட்டத்திலும் நடைபெற்றது. 

இக்கருத்தரங்கில் அமைச்சரை வரவேற்றுப் பேசிய காவேரி கூக்குரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் திரு. தமிழ்மாறன் அவர்கள் "தற்சமயம் தமிழ்நாட்டில் மூன்று மாவட்டங்களில் மட்டுமே தோட்டக்கலை துறை சார்பாக, விவசாயிகளுக்கு மிளகு கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது சம வெளியிலும் மிளகு சாகுபடி சாத்தியம் என்று நிருபிக்கபட்டுள்ளதால், தமிழக அரசு மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட விவசாயிகளுக்கும் மிளகு கன்றகளை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்" என்ற கோரிக்கையை முன் வைத்தார்.

கருத்தரங்கை துவக்கி வைத்த சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு. மெய்யநாதன் அவர்கள் பேசுகையில் "2018 கஜா புயலுக்கு பின் புதுக்கோட்டையில்  பாதிக்கப்பட்டிருந்த நிலங்களை இந்த பகுதி விவசாயிகள் மரம் சார்ந்த விவசாயத்தின்  மூலம் கடந்த 5 - 6 ஆண்டுகளில் மீட்டெடுத்து, பசுமை பரப்பை அதிகரித்துள்ளனர். இயற்கையை பாதுகாக்கும் விவசாயிகளே இயற்கையை காக்கும் மருத்துவர்கள் என பெருமிதத்துடன் கூறினார்.

அத்துடன் பூமியை பாதுகாக்க மரங்களை நடவு செய்வோம், மிளகின் மூலம் கூடுதல் வருவாய் பெறுவோம். மேலும் காவேரி கூக்குரல் சார்பில் வைக்கப்பட்ட அனைத்து மாவட்ட விவசாயிகளுக்கும் மிளகு கன்றுகள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் " என உறுதியளித்தார். 

இந்த மிளகு சாகுபடி கருத்தரங்குகளில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முன்னோடி விவசாயிகள், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் புதிய ரக மிளகை கண்டுபிடித்து காப்புரிமை பெற்றவர்கள் பங்கேற்று மிளகு ரகங்களை தேர்ந்தெடுப்பதில் தொடங்கி, அதை நட்டு பராமரிக்கும் வழிமுறைகள், அறுவடை செய்யும் முறைகள், விற்பனை மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள் என பல்வேறு தகவல்களை விவசாயிகளுடன் பகிர்ந்து கொண்டனர்.

குறிப்பாக  மிளகு சாகுபடியில் முன்னோடி விவசாயியான ஆசிரியர் திரு. ராஜாகண்ணு அவர்கள் பேசுகையில் " மிளகு என்பது மனிதர்களின் உணவில் தவிர்க்க முடியாத அருமருந்து, அது மலை பிரதேசங்களில் மட்டுமே கிடைக்கும் என்ற நிலை மாறி இன்று சமவெளியிலும் சாத்தியப்படுத்தி இருக்கிறோம். இரண்டு தலைமுறை பயிர் என்றழைக்கப்படும் மிளகை பயிர் செய்த  6 வருடங்களுக்கு பிறகு ஒரு செடியில் இருந்து 3 - 5 கிலோ வரை மகசூல் எடுக்க முடியும். மேலும்  ஒரு ஏக்கரில் 500 - 1000 கிலோ வரை காய்ந்த மிளகை எடுக்கலாம். எனவே சரியான பராமரிப்பு முறைகளை பின்பற்றினால் நல்ல மகசூலுக்கான வாய்ப்பு சமவெளியிலும் உண்டு" என தெரிவித்தார்.

மேலும் இக்கருத்தரங்கில்  இந்திய நறுமணப் பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானிகள் டாக்டர். கண்டிஅண்ணன் மற்றும் டாக்டர் . முகமது பைசல் அவர்கள் மிளகு சாகுபடி  குறித்தும், அதில் ஏற்படும் நோய்கள் மற்றும் தீர்வுகள் குறித்தும் பேசினர். இவர்களோடு இந்திய நறுமண பயிர்கள் வாரியத்தின் துணை இயக்குனர் ந. சிமந்தா சைக்கியா அவர்கள் மிளகு ஏற்றுமதி குறித்து விளக்கினார்.

மேலும், சமவெளியில் மிளகு சாகுபடி மூலம் வெற்றி கண்டிருக்கும் முன்னோடி விவசாயிகளான திரு. பாலுசாமி, திரு. ராஜாகண்ணு, திரு. செந்தமிழ் செல்வன், திரு. பாக்கியராஜ், வளர்மதி மற்றும் தனித்தன்மை வாய்ந்த பெப்பர் தெக்கன்-1 மிளகு, காப்புரிமை பெற்ற 50 வருட அனுபவ விவசாயி திரு. டி.டி. தாமஸ் உள்ளிட்டோர் தங்கள் அனுபவங்களை விளக்கி கூறினர்.

இதைத் தொடர்ந்து மயிலாடுதுறையில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்று பேசிய முன்னோடி விவசாயி, ஆசிரியர் ந.வீரமணி அவர்கள் சரியான சூழலை ஏற்படுத்தினால் டெல்டாவிலும் மிளகு விவசாயம் சாத்தியம் என்பதை தன் அனுபவத்தில் இருந்து பகிர்ந்து கொண்டார்.

இது மட்டுமின்றி, கருத்தரங்க நிறைவுக்கு பின் பண்ணை பார்வையிடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் மூலம் விவசாயிகள் தங்களுக்கிருந்த பல்வேறு சந்தேகங்களை நேரில் பார்த்து கேட்டு தெரிந்து கொண்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆபாச வீடியோ புகார்..! தேவகவுடாவின் பேரன் மீது வழக்குப்பதிவு..!