கடந்த சில வாரங்களாக வேகமாக விலை ஏறி வந்த பூண்டு தற்போது மார்க்கெட் நிலவரப்படி கிலோவுக்கு ரூ.50 குறைந்துள்ளது.
தமிழ்நாட்டின் வீடுகளிலும், உணவகங்களிலும் பல உணவுப்பொருட்களில் அத்தியாவசியமான பொருளாக பூண்டு உள்ளது. தமிழகத்தில் பூண்டு கொள்முதல் அதிகளவில் உத்தர பிரதேசத்தில் இருந்துதான் செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக உத்தர பிரதேசத்தில் பூண்டு விளைச்சல் குறைந்துள்ளதால் வரத்தும் குறைந்துள்ளது.
இதனால் நாளுக்கு நாள் பூண்டின் விலை அதிகரித்து வந்தது. கடந்த வாரத்தில் அதிகபட்சமாக பூண்டின் மொத்த கொள்முதல் விலையே கிலோ ரூ.450 ஆக இருந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் இன்றைய நிலவரப்படி பூண்டு விலை கிலோவுக்கு ரூ.50 வீழ்ச்சியடைந்து கிலோ ரூ.380 முதல் ரூ.400 வரை விற்பனையாகி வருகிறது.
அடுத்தடுத்த வாரங்களில் பூண்டு வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பூண்டின் விலை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் என மக்கள் பெருமூச்சு விட்டு வருகின்றனர்.