சேலத்தில் நடந்த அதிமுக நிகழ்ச்சியில் பேசிய இடைக்கால பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் ஒரு செல்லாத நோட்டு என பேசியுள்ளார்.
அதிமுக இடைக்கால பொதுசெயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவி வகித்து வரும் நிலையில் அதிமுக உட்தகராறுகளை தவிர்த்து எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவதில் தீவிரம் காட்டி வருகிறார்.
இந்நிலையில் இன்று சேலம் மாவட்டம் ஓமலூரில் கட்சி நிர்வாகிகளுடன் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகள் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது பேசிய அவர் “ஒரு பூத்துக்கு 25 பேர் வீதம் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 7500 பேர் நியமிக்கப்பட வேண்டும். அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் வகையில் அனைவரின் செயல்பாடும் இருக்க வேண்டும்” என கூறியுள்ளார்.
மேலும் “அதிமுக பற்றி பேசினால் மக்கள் கவனம் கிடைக்கிறது. திமுகவிற்கு அது கிடைப்பதில்லை. திமுக ஆட்சி எப்போது போகும் என மக்கள் எதிர்பார்த்து உள்ளனர். சேலம் மாவட்டத்தில் பல மகத்தான திட்டங்கள் அனைத்தும் அதிமுக ஆட்சியிலேயே செயல்படுத்தப்பட்டுள்ளன” என பேசியுள்ளார்.
ஓபிஎஸ் குறித்து பேசிய அவர் “எம்ஜிஆர் ஏற்படுத்திய சட்ட விதிகளுக்கு உட்பட்டு பொதுக்குழு நடத்தப்பட்டு 2500 உறுப்பினர்களும் ஏகமனதாக ஓபிஎஸ்-ஐ நீக்கினோம். அதில் போடப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் செல்லும். செல்லாத நோட்டை பற்றி நான் ஏன் பேச வேண்டும்?” என பேசியுள்ளார்.