முத்திரைத்தாள் கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் தத்து ஆவணங்களுக்கு ரூ.100 கட்டணம் ரூ.1000 ஆகவும், ஒப்பந்த ஆவணங்களுக்கு ரூ.20 கட்டணம் ரூ.200 ஆகவும், ரத்து பத்திரங்களுக்கு ரூ. 50 கட்டணம் ரூ.1000 ஆகவும் அதிகரித்துள்ளது. டூப்ளிகேட் பிரதிகளுக்கு ரூ.20 கட்டணம் ரூ.100 ஆகவும், குடும்ப உறுப்பினர் பவர் பத்திரம் போடுவதற்கு ரூ.100 கட்டணம் ரூ.1000 ஆகவும் உயர்ந்துள்ளது.
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, 26 சேவைக்கான முத்திரைத்தாள் கட்டணங்களை 10 மடங்கு முதல் 33 மடங்கு வரை உயர்த்தி இருப்பது கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார்.
முத்திரைத்தாள் கட்டணங்களை உயர்த்தி வெளியிட்டுள்ள அரசாணையை உடனடியாகத் திரும்ப பெற வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி, வழிகாட்டு மதிப்பையும் முன்பிருந்த நிலைக்குத் தொடர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
மின் கட்டணம், பால் உள்ளிட்ட விலை உயர்வு மூலம் மக்கள் தலையில் தமிழக அரசு சுமையை ஏற்றுகிறது என்று எடப்பாடி பழனிச்சாமி காட்டமாக பதிவிட்டுள்ளார்.