மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி அணி செயல்பட்டு வரும் நிலையில், இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.
ஏற்கனவே, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அணி இரு முக்கிய கோரிக்கைகளை வைத்திருந்தது. முதலில், சசிகலா, தினகரனை கட்சியிலிருந்து வெளியேற்றுவது மற்றும் ஜெ.வின் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்துவது என்றிருந்த நிலையில், முதல் கோரிக்கையை ஏற்கனவே எடப்பாடி அணி நிறைவேற்றியுள்ளது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முதல்வர் “முதல்வர் ஜெ.வின் இறப்பு குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணைக் குழு அமைக்கப்படும். ஜெ. வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா நிலைய இல்லம் நினைவிடமாக மாற்றப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும்” என அறிவித்தார்.
இதன் மூலம், ஓ.பி.எஸ் அணியின் அனைத்து கோரிக்கைகளையும் எடப்பாடி அணி நிறைவேற்றி விட்டது. எனவே, இரு அணிகளும் விரைவில் இணைந்து விடும் எனத் தெரிகிறது.