தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று சந்திக்கின்றனர்.
தமிழக ஆண்டு பட்ஜெட் மீதான கூட்டத்தொடர் தமிழக சட்டமன்றத்தில் நடந்து வருகிறது. மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் நடைபெற இருப்பதால் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே கூட்டத்தொடரை முடித்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பான விவகாரம் மீண்டும் விசாரிக்கப்படும் என தெரிவித்தார். இதை எதிர்த்து அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு எழுந்தது.
இதனைத்தொடர்ந்து அதிமுகவுடன் மற்ற எதிர்கட்சிகளான பாமக, பாஜகவும் சட்டப்பேரவையில் வெளியேறினர். பிறகு வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தை இன்று புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்தது.
இதனிடையே தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று சந்திக்கின்றனர். காலை 11.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக அதிமுக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த நிலையில் இன்று ஆளுநரை சந்திப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.