முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆகியோரை டெல்லிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
டெல்லியிலிருந்து அழைப்பு வரும் என காத்திருந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ்-ஸிற்கு அங்கிருந்து அழைப்பு ஏதும் வரவில்லை.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்த விவகாரத்தில், ஏற்கனவே ஆளுநர் வித்யாசாகர் ராவ் கடுமையான கோபத்தில் இருக்கிறார். ஏனெனில், இந்த விவகாரத்தில், ஆளுநர் எடப்பாடி அணியின் அவைத்தலைவர் போல் செயல்படுகிறார் என தினகரன் அடித்த கமெண்ட் ஆளுநரை சூடாக்கியுள்ளது. போதா குறையாக, எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தின் ஆளுநர் தலையும் உருண்டு கொண்டிருக்கிறது.
எனவே, அவரை சமாதானப்படுத்த அருண்ஜேட்லி, ஜனாதிபதி என பல வகைகளில் எடப்பாடி முயன்றும் அதற்கான பலன் கிடைக்கவில்லை.
இந்நிலையில், மருத்துவமனையில் ஜெயலலிதாவை யாருமே பார்க்கவில்லை என கொளுத்திப் போட்டார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். அப்படியெனில், தன்னைப் பார்த்து ஜெயலலிதா தனது கட்டை விரலை உயர்த்திக்காட்டினார் என ஆளுநர் கூறியதும் பொய்தானா என்கிறா விவாதம் தற்போது எழுந்துள்ளது. இப்படி தொடர்ச்சியாக தன்னை எடப்பாடி தரப்பு சிக்கலில் சிக்க வைப்பதால், ஆளுநர் கோபத்தின் உச்சத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில்தான், டெல்லிக்கு வருமாறு எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ்-ஸிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை அவர்கள் டெல்லி செல்கிறார்கள் எனவும், அங்கு அவர்கள் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி ஆகியோரை சந்தித்து பேசுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போதுள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அவர்களுக்கு அங்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கப்படும் எனத் தெரிகிறது.