Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்.! மத்திய மாநில அரசுகளுக்கு அன்புமணி வலியுறுத்தல்..!!

Anbumani

Senthil Velan

, சனி, 17 ஆகஸ்ட் 2024 (10:53 IST)
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு  பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 
இதுகுறித்து தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,   “கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 9-ஆம் தேதி பணியில் இருந்த முதுநிலை மருத்துவ மாணவி சிலரால் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதும், அதைத் தொடர்ந்து அங்கு இரு நாட்களுக்கு முன் நிகழ்ந்த வன்முறைகளும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன. மனிதத் தன்மையற்ற மிருகத்தனமான இந்த செயல்கள் மன்னிக்க முடியாதவை.
 
முதுநிலை பயிற்சி மருத்துவருக்கு நேர்ந்த கொடூரத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்திருக்கும் நிலையில், கடந்த புதன்கிழமை இரவில் மருத்துவர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த போது ஆர்.ஜி.கர் மருத்துவமனைக்குள் நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று அங்குள்ள பொருட்களை சூறையாடியதுடன், மருத்துவர்களையும், காவல்துறையினரையும் தாக்கியுள்ளது. ஒரு கட்டத்தில் காவல்துறையினர் கண்ணீர்புகை குண்டுகளை வீசி வன்முறை கும்பலைக் கலைக்கும் அளவுக்கு நிலைமை மோசமடைந்திருக்கிறது.
 
உயிர்காக்கும் மருத்துவர்கள் கடவுள்களைப் போன்றவர்கள். அவர்களை வணங்க வேண்டிய கைகளால் பாலியல் வன்கொடுமை, படுகொலை, கொலைவெறித் தாக்குதல்களை நடத்துபவர்கள் கண்டிப்பாக மனிதகுலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க முடியாது. பயிற்சி மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவர்கள் யார்? வன்முறையில் ஈடுபட்டவர்கள் யார்? என்பதை இதுவரை மேற்குவங்க காவல்துறையும், மத்தியப் புலனாய்வுத்துறையும் கண்டுபிடிக்காதது மருத்துவர்களிடையே அச்சத்தை அதிகரித்திருக்கிறது.
 
webdunia
மருத்துவர்களின் பணி என்பது உன்னதமானது என்பதைக் கடந்து மிகவும் கொடுமையானது. முதுநிலை மருத்துவம் பயிலும் மருத்துவர்கள் தொடர்ந்து 36 மணி நேரம் பயிற்சி மருத்துவராக பணியாற்ற வேண்டும். இதுவே கடுமையான மன உளைச்சலையும், உடல் சோர்வையும் அளிக்கக் கூடிய செயலாகும். அவர்கள் ஒரே இடத்தில் அமர்ந்து பணி செய்ய முடியாது. 
 
பரந்து விரிந்த அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனைகளில் பல இடங்களுக்கு அவர்கள் சென்று நோயாளிகளுக்கு மருத்துவம் அளிக்க வேண்டும். அதிக எண்ணிக்கையில் பெண்கள் முதுநிலை மருத்துவம் பயிலக் கூடிய இன்றைய சூழலில் இரவு நேரப் பணிகள் என்பவை பாதுகாப்பற்றவையாகவே உள்ளன. கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் நிகழ்ந்த கொடூரங்கள் குறித்து சில நாட்களுக்கு பேசி விட்டு, வேறு பெரிய சிக்கல் வெடித்ததும் இதை மறந்து விடக் கூடாது.

கொல்கத்தா பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தூக்குத் தண்டனை பெற்றுத்தர வேண்டும். மருத்துவர்களை அச்சுறுத்தும் வகையில் வன்முறையில் ஈடுபட்ட கும்பலையும், அவர்களின் பின்னணியில் இருப்பவர்களையும் கைது செய்து தண்டிக்க வேண்டும். இவை அனைத்திற்கும் மேலாக அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் பணியாற்றும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.


வாய்ப்பிருந்தால் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் தனி காவல் நிலையம் அமைக்க வேண்டும். பட்ட மேற்படிப்பு மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, அவர்களுக்கான பணி நேரத்தை இயன்ற அளவுக்கு குறைக்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கம்பத்தில் சிக்கிய தேசியக் கொடி.. பறந்து வந்து மீட்ட ‘சுதந்திர’ பறவை! - கேரளாவில் ஆச்சர்ய சம்பவம்!