தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிந்த நிலையில் வளிமண்டல சுழற்சி காரணமாக மழை வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் முதலாக வடகிழக்கு பருவமழை தொடங்கி நடந்து வந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் புயல் காரணமாக தமிழகம், புதுச்சேரி, ஆந்திராவின் கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. எல் நினோ நிலை காரணமாக தென் மாவட்டங்களில் அதீத மழைப்பொழிவு இருந்தது.
இந்நிலையில் கடந்த வாரம் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்ததாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இனி வளிமண்டல வெப்ப சுழற்சி காரணமாக ஆங்காங்கே சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கலாம் என கூறப்பட்டது.
அதன்படி இன்று வளிமண்டல சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டிணம், திருவாரூர், தஞ்சாவூர் பகுதிகளிலும், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மற்ற பகுதிகளை பொறுத்த வரை வறண்ட வானிலையே நிலவும் என்றும், காலை வேளையில் பனிமூட்டம் வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.