தமிழகம் முழுவதும் மின்னணு குடும்ப அட்டைகள் கடந்த 1ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வரும் நிலையில் சென்னையில் மட்டுமே ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெற இருந்ததால் தேர்தல் முடிந்த பின்னர் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தற்போது சென்னையில் மின்னணி குடும்ப அட்டைகள் வழங்கப்படும் தேதி குறித்த தகவல் வெளிவந்துள்ளது.
இதுகுறித்து நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இதுவரையில் இரண்டு கட்டங்களாக 38.60 லட்சம் மின்னணு குடும்ப அட்டைகள் அச்சடித்து மாவட்டந்தோறும் மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சென்னை மாவட்டத்தில் மொத்தம் 20.5 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். அவர்களுக்கு வரும் 17-ஆம் தேதி முதல் நியாய விலைக்கடைகள் மூலம் விநியோகிக்க இருப்பதாக அவர் தெரிவித்தார்.
மேலும் தமிழகம் முழுவதும் 1.89 கோடி குடும்ப அட்டைகளுக்கு 34 ஆயிரத்து 840 நியாய விலைக்கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிவதாகவும், முறைகேடுகளைத் தவிர்க்கவும், தகுதியானவர்களுக்கு உணவுப் பொருள் கிடைக்கச் செய்யும் நோக்கத்தில் குடும்ப அட்டைக்குப் பதிலாக மின்னணு குடும்ப அட்டைகள் கடந்த 1-ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வருவதாகவும் அந்த அதிகாரி மேலும் கூறினார்