Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தேர்தல் முடிவுகள் நம்மை சோர்வடைய செய்யாது.! 2026-ல் மகத்தான வெற்றி பெறுவோம்.! இபிஎஸ் உருக்கம்..!!

edapadi

Senthil Velan

, செவ்வாய், 4 ஜூன் 2024 (21:06 IST)
நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் முடிவுகள் நாம் எதிர்பார்த்தது போலவே அதிகார பலமும், பண பலமும், பொய் பிரச்சார பலமும், அறத்துக்கு அப்பாற்ப்பட்ட சூழ்ச்சி பலமும் மிகுந்தவர்களுக்கு சாதமாக வந்திருக்கின்றன என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாடாளுமன்ற மக்களவை பொது தேர்தலில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காள பெருமக்களுக்கு நன்றி.
 
கான முயலெய்த அம்பினில் யானை
 
பிழைத்தவேல் ஏந்தல் இனிது'
 
நெடிய அரசியல் பயணத்தில் வெயிலும், நிழலும் கொள்கைப் போராளிகளுக்கு சமமே. வீழ்த்த முடியாத மக்கள் பேரியக்கம் அதிமுக என்பது மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.
 
நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் முடிவுகள் நாம் எதிர்பார்த்தது போலவே அதிகார பலமும், பண பலமும், பொய் பிரச்சார பலமும், அறத்துக்கு அப்பாற்ப்பட்ட சூழ்ச்சி பலமும் மிகுந்தவர்களுக்கு சாதமாக வந்திருக்கின்றன.
 
தற்போது வெளிவந்திருக்கும் நாடாளுமன்ற பொது தேர்தல் முடிவுகள் மக்களின் ஏகோபித்த எண்ணங்களை முழுமையாக பிரதிபலிக்கும் முடிவு அல்ல என்பதை தெளிவுபடுத்தி கொள்வதோடு, அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழத வேட்பாளர்களுக்கும், கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வாக்கு அளித்த வாக்காள பொருமக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை உரிதாக்கி கொள்கிறேன்.
 
பொன்மன செம்மல் புரட்சி தலைவர் எம்ஜிஆர், ‘மக்களால் நான் மக்களுக்காகவே நான்’ என்று தவவாழ்வு வாழ்ந்த புரட்சி தலைவி அம்மா ஆகியோர் உருவாக்கி கட்டிக்காத்து வழிநடத்திய அனைத்து இந்தியா அண்ணா திராவிட கழகத்தை சூழ்ச்சியால் வீழ்த்தி, சுயநலத்துக்காக கபளீகரம் செய்ய திரை மறைவிலும், வெளிப்படையாகவும் நடைபெற்ற சூழ்ச்சிகளையும் மிகவும் நுணுக்கமாக புரிந்து கொண்ட கழக தொண்டர்கள் அன்பு கட்டளைக்கு ஏற்பவே கொள்கைக்காக வாழ்வோம்; எது வந்தாலும் ஏற்போம் என்று இந்த தேர்தலில் களம் இறங்கினோம்.
 
காட்டிலே ஓடும் முயலை குறி தவறாது கொன்ற அம்பைவிட, யானையின் மேல் குறி வைத்து தவறிப்போன வேலை தாக்குதல் வீரனுக்கு அழகாகும் என்ற திருவள்ளுவரின் பொது வாழ்வு இலக்கணத்துக்கு ஏற்ப, இந்த தேர்தலை கனநேர சிறிய வெற்றிக்காக அல்லாமல், ஏற்றுக்கொண்ட கொள்கை வெற்றிக்காக துணிவுடன் எதிர்கொண்டது அனைத்து இந்தியா அண்ணா திராவிட கழகம். தனித்து நின்றோம்; கொள்கை வீரர்களாக தலை நிமிர்ந்து நிற்கிறோம்.
 
அனைத்து இந்தியா அண்ணா திராவிட கழகம் அதிகார பலம் படைத்தவர்களின் நிழலில் மக்கள் நலனையும், மாநிலத்தின் பெருமையையும் இழக்காமல் பதவி என்பது எங்களை பொறுத்தவரை மக்களுக்கு பணியாற்ற ஒரு பாதையே தவிர, எல்லா நேரத்திலும் கொள்கை சிங்கங்களாகவே அரசியல் களமாடுவோம் என்பதை இந்த தேர்தல் உலகுக்கு உரக்க சொல்லி இருக்கிறது.
 
இனி அனைத்து இந்தியா அண்ணா திராவிட கழகம் அவ்வளவுதான் என்று 1980, 2004, 2019 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளின் போதும், 1986 சட்டப்பேரவை தேர்தல் தேர்தல் முடிவின்போதும், 2021 சட்டப்பேரவை தேர்தல் முன்பாகவும் நம் கதை முடிந்ததாக ஆரூடம் கூற ஆனந்தப்பட்டவர்களின் அகங்காரத்தை முறியடித்த பெருமை கழக உடன் பிறப்புகளுக்கு உண்டு. 2021 சட்டப்பேரவை பொது தேர்தலில் கழக கூட்டணி 75 இடங்களை பெற்று நாம் யார் என்பதை உலகுக்கு காட்டினோம்.
 
இந்த தேர்தல் முடிவுகள் நம்மை சோர்வடைய செய்யாது. 2026 சட்டப்பேரவை பொது தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான பாடமும், படிப்பினையும் நமக்கு கிடைத்திருக்கிறது. அந்த தேர்தலில் நாம் மகத்தான வெற்றியை பெறுவோம்.
 
எந்த பிரதிபலிப்பையும் எதிர்பார்க்காமல் இதுநாள் வரை அனைத்து இந்தியா அண்ணா திராவிட கழகம் மக்களுக்கு ஆற்றிய தொண்டுகளை மனதில் கொண்ட நம் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்தவர்களுக்கு மீண்டும் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
 
தேர்தலின் போது அல்லும் பகலும் அயராது உழைத்த கழக நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்களின் திருப்பாதம் பணிகிறேன். உங்கள் உழைப்புக்கும், தியாகத்துக்கும் என்ன கைமாறு செய்யப்போகிறேன் என்று கண் கலங்குகிறேன். இன்னும் தீவிரமாகவும் தீர்க்கமாகவும் பணியாற்றி நீங்கள் தலை நிமிர்ந்து வெற்றி நடை போட உறுதி ஏற்கிறேன். உங்கள் ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றியை பாசத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.

 
அனைத்து இந்தியா அண்ணா திராவிட கழகத்துக்கு ஆதரவு அளித்த கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள், தோழமை இயக்கத்தினர் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நம்பகத்தன்மையை இழந்த மோடி.! பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய மம்தா வலியுறுத்தல்..!!